Wednesday, July 14, 2010

தகவல் தர மறுக்கும் அதிகாரியை கைது செய்யலாம்


DINAMANI : 12 Jul 2010 02:42:28 AM IST

சென்னை, ஜூலை 11: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை அளிக்க மறுக்கும் பொது தகவல் அதிகாரியை கைது செய்வதற்கு தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. சட்டத்தில் இதற்கான வழிவகை உள்ளது என்பதை நாட்டில் முதன்முறையாக அருணாசலப் பிரதேச மாநில தகவல் ஆணையம் நிருபித்துள்ளது. தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக பி.சி.ஆர்.எப். அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி வருகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து சிறந்த தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர், பத்திரிகையாளர், பொது தகவல் அதிகாரி, தகவல் ஆணையர், தகவல் ஆணையம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு இவ் விருதுகள் பெறுவதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான விண்ணப்பங்கள் வந்து குவிவதாக பி.சி.ஆர்.எப். அமைப்பினர் தெரிவித்தனர். இந்த சமயத்தில் கடந்த ஆண்டு சிறந்த தகவல் ஆணையமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற அருணாசலப் பிரதேச தகவல் ஆணையத்தின் பணிகள் குறித்து பி.சி.ஆர்.எப். அமைப்பினர் கூறியது: நாடு முழுவதும் தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் மத்தியில், இந்த சட்டத்தின்படி 2-வது மேல்முறையீட்டுக்காக செல்லும் போது, தகவல் ஆணையங்கள் தங்களது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இத்தகைய சூழலில், அருணாசல பிரதேச தகவல் ஆணையம் 90 சதவீத மனுக்களை விசாரித்து உரிய இறுதி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது நாட்டில் உள்ள மற்ற ஆணையங்களை விட மிக அதிகமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. 2006-07 ஆண்டில் தகவல் அளிக்காத 25 அதிகாரிகளுக்கு அபராதம் விதித்த இந்த ஆணையம் 2008-ம் ஆண்டில், 18 சதவீத மனுக்களின் மீதான விசாரணையின் போது அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, மனுதாரருக்கு தகவல் அளிக்காமல், அது தொடர்பான மேலதிகாரியின் உத்தரவை மதிக்காமல் இருந்த சில பொது தகவல் அதிகாரிகளை கைது செய்ய ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது ஆணைகளை பிறப்பித்துள்ளது. தகவல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் 18(3) பிரிவின் கீழ் இத்தகைய அதிகாரம் தகவல் ஆணையத்துக்கு உள்ளது என்பதை இந்த ஆணையம் நாட்டுக்கு நிரூபித்து காட்டியுள்ளது. இதுவே இந்த ஆணையம் நாட்டிலேயே சிறந்த தகவல் ஆணையத்துக்கான விருதுகளை பெற முக்கிய காரணம் என்றும் பி.சி.ஆர்.எப். அமைப்பினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment