Wednesday, July 14, 2010

தகவல் பெறும் உரிமை சட்டம்: சிறந்த ஆர்வலர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 28 பேர் மனு


DINAMANI 14 Jul 2010 02:32:51 AM IST


சென்னை, ஜூலை 13: தகவல் பெறும் உரிமைச் சட்ட சிறந்த ஆர்வலர் விருது பெற தமிழகத்தில் இருந்து 28 பேர் மனு செய்துள்ளனர். தகவல் பெறும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.) தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.சி.ஆர்.எப். அமைப்பு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சிறந்த ஆர்.டி.ஐ. குடிமகன், சிறந்த ஆர்.டி.ஐ. பத்திரிகையாளர், சிறந்த பொது தகவல் அதிகாரி உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான இந்த ஆண்டு நிகழ்வில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி உள்ளிட்ட இதழ்கள் பங்காளர்களாக உள்ளனர். ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரத்துடன் இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெற மனு செய்வதற்கு ஜூலை 15 கடைசி நாள் என்பதால் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மனுக்கள் வந்து கொண்டிருப்பதாக பி.சி.ஆர்.எப். அமைப்பினர் தெரிவித்தனர். தமிழகத்தில் இருந்து இந்த விருது பெறுவதற்காக மனு செய்வதில் தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் மத்தியில் நல்ல ஆர்வம் காணப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் இருந்து 28 ஆர்வலர்கள் விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர். சிறந்த ஆர்.டி.ஐ. பத்திரிகையாளர் பிரிவில் விருது பெற 3 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும், தமிழகத்தில் இருந்து சிறந்த பொதுத் தகவல் அதிகாரி விருதுக்கு விண்ணப்பிப்பதில் அதிகாரிகள் மத்தியில் ஆர்வம் காணப்படவில்லை. கோவில்பட்டியில்...: சிறந்த ஆர்வலர்களுக்கான பிரிவில் விண்ணப்பித்தவர்களில் சிலரது சாதனைகள் அவ்வப்போது விவரிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பி. இசக்கிமுத்துவின் சாதனைகள் தற்போது விவரிக்கப்படுகிறது. மாவட்ட கூட்டுறவு பணியாளர்கள் சங்க தலைவரான இசக்கிமுத்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி கோரிய விவரங்களால், கோவில்பட்டி கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ சட்டப்படி பலன் கிடைக்க வழிவகை ஏற்பட்டது. இது இந்த சட்டத்தின் பணிகளில் குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது. இதையடுத்து இவரது மனு சிறந்த ஆர்வலர் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தருமபுரியில்...: இதேபோல, தருமபுரியில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு நிலையங்களில் இருந்து, வெவ்வேறு இடங்களில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பப்படும் பெண் குழந்தைகளுக்கு உரிய வசதிகள் கிடைப்பதை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தியதாக டாக்டர் எல். ரவிச்சந்திரனின் மனுவும் சிறந்த ஆர்வலர்களுக்கான பரிசீலனைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என பி.சி.ஆர்.எப். அமைப்பினர் தெரிவித்தனர். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அது குறித்த மேலும் விவரங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9717460029.

No comments:

Post a Comment